"சின்ன சின்ன பேய் கதைகள்" (கதை 1 :"பேய் பிடித்த காதலி")

mgid start

கதையின் ஆசிரியர் : ரா.பிரபு

கேரளாவின் ஒரு வானாந்திர பகுதி அது. அந்த இருவர் நீண்ட தூரம் காட்டுக்குள் நடந்ததில் ஏகத்திற்கு களைத்து இருந்தார்கள்.
இப்படி காட்டுக்குள் நடப்பது அவர்களுக்கு பழக்கம் இல்லை.
அதுவும் இப்படி பட்ட இருட்டு அவர்களுக்கு சுத்தமாக பரிச்சயம் இல்லை.
அவர்கள் ..சரவணன் மற்றும் திலிப் .

"ஹப்படா ஒரு வழியா வந்துட்டோம்" என்றான் திலிப் கொஞ்சம் மூச்சை விட்டு கொண்டான்

"அதோ நான் சொன்ன இடம்"

என்று திலிப் சுட்டி காட்டிய இடத்தில் ஒரு குடிசை இருந்தது உள்ளே ஒரு சின்ன விளக்கு ஏற்ற பட்டு இருந்தது.
'இந்த காட்டு நடுவில் ஒரு குடிசையா '
சரவணனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
கொஞ்சம் வியப்போடு நடந்து அந்த வீட்டை அடைந்தார்கள்.
உள்ளே ...
அந்த நம்பூதிரி உட்கார்ந்து ஏதோ பூஜையில் இருந்தார்..அவர் பார்க்க பயமுறுத்தும் விதமாக இருந்தார்.

"வந்தாச்சா....உட்காருங்க...."ஒலித்த குரலில் வெண்கல மணியின் கணீர் இருந்தது.

"இது தான் நீ சொன்ன பையனா"என்றார் திலிப்பை பார்த்து.

"ஆமாமங்க"

அதன் பின் நம்பூதிரி ஏதும் பேச வில்லை பக்கத்தில் இருந்த ஒரு சிண்ண பேழையை எடுத்தார் .அது ஏகப்பட்ட பொட்டுகள் வைக்க பட்டிருந்த சின்ன டப்பா... அதை திறந்து அந்த தாயத்தை எடுத்தார் .
அதை கையில் ஏந்தி கண்ணை மூடி மந்திரம் சொல்ல தொடங்கினார்.

சரவணனுக்கு இதை எல்லாம் நம்புவதா வேண்டாமா என்று இன்னும் குழப்பமாக தான் இருந்தது ..ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை.
ப்ரியாவுக்காக எதையும் செய்ய துணிந்திருந்தான்.

பிரியா???
அவனை கொள்ளை கொண்ட கொள்ளை காரி. தனது துறுதுறு குணத்தால் இவனை வளைத்து போட்ட அழகி. அவளிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு சரவணன் அடிமை.
காலேஜில் தனக்கு ஜூனியர். கடந்த 7 மாதமாக நிறைய கதை பேசி நிறைய ஊர் சுற்றி நிறைய கிளாஸ் களை கட் அடித்து ...நிறைய பழகி..
நன்றாக தான் போய் கொண்டு இருந்தது.
ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு வரை ....

அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ப்ரியாவிடம் மாறுதலை பார்த்தான்.
அவள் துறு துறு குணம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலக தொடங்கியது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தாள்.
ஆரம்பத்தில் ஏதோ பர்சனல் பிரிச்சனை போல என்று விட்டு விட்டான்..
ஆனால்.
அவளிடம் முரட்டு தனம் குடி கொள்ள தொடங்கியது.
பேச்சு மாறியது செயல்கள் மாறியது குறிப்பாக ரெஸ்டாரண்ட் அழைத்து சென்றால் 3 ஆள் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிட்டாள். சாதாரணமாக அவள் அதிகம் சாப்பிடாதவள் என்பது அவனுக்கு தெரியும்.
உடலில் ஏதாவது பிரச்சனையா என்று யோசித்தான்.
அன்று நடந்ததில் தான் அதிகம் அதிர்ந்து போனான் ...

டிராபிக் இல் பைக்கில் இருக்கும் போது பின்னால் வந்து இடித்தவனை இறங்கி சென்று கன்ணத்தில் பளார் என அரை விட்டதை பார்த்தவன் அதிர்சியில் உறைந்து போனான்.
யாரிடமும் அதிர்ந்து பேசாத பிரியாவா இது?

அப்போது தான் திடீரென ப்ரியாவை காண வில்லை.. திடீர் லீவ்.
அவளுக்கு ஊர் திருநெல்வேலி பக்கம் ஒரு கிராமம். காதல் விவகாரம் இரண்டு வீட்டுக்கும் தெரியும் என்பதால் இவனை அவர்கள் வீட்டில் நன்கு தெரியும்.
அவள் வீட்டுக்கு போன் செய்த போது தான் அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்கள்.

"ப்ரியாவுக்கு பேய் பிடிச்சிருக்குப்பா அவளை வீட்டில் தனி அறையில் கட்டி வச்சி டெய்லி பேய் ஒட்டிட்டு இருக்காங்க"

அதிர்ச்சியோடு நண்பன் திலிப்பை அழைத்து கொண்டு உடனே நெல்லை கு ட்ரெயின் ஏறினான்.
அவள் ஊருக்கு ஏற்கனவே வந்து இருக்கிறான்.
நண்பன் திலிப்பும் இவனும் அவர்கள் வீட்டை நெருங்கும் போது தூரத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் போதே அந்த அலறல் சப்தம் கேட்டது..
அது ஏதோ கொண்டு வந்தியா என்று கேட்பதை போல் இருந்தது வார்த்தை சரியாக புரியவில்லை.
அதிர்ச்சியோடு வீட்டை நெருங்கினான்.

கொஞ்ச பழைய டைப் அந்த காலத்து பெரிய வீடு அது அதில் கொஞ்சம் தள்ளி இருந்த தனி அறையை கையை காட்டினார்கள்.
கடந்த முறை இங்கே வந்த போது அது பழைய சாமான்கள் போட்டு வைக்கும்
ஸ்டோர் ரூம் என்பது நினைவு வந்தது.

இருவரும் அந்த கதவை தள்ளி உள்ளே எட்டி பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள் .
உள்ளே அவளை சங்கிலியில் கட்டி வைத்திருந்தார்கள். தலை முடி களைந்து உடல் இளைத்து.. இது ப்ரியா தானா என்று அவனாலேயே நம்ப முடியவில்லை.
உடல் முழுதும் ஒரு மாதிரி நீல நிறம் பாய்ந்து ..நரம்பு ஆங்காங்கே தூக்கி புடைத்து தெரிந்தது. கண்களில் இரண்டு சொட்டு ரத்தத்தை விட்டதை போல சிவந்திருந்தது.
இவனை பார்த்ததும் மீண்டும் அதே பயங்கர சப்தத்துடன் அலறினாள்..
இம்முறை வார்த்தை தெளிவாக புரிந்து

"ரத்தம் கொண்டு வந்தியாடா..ஆ....ஆ...ஆ.... ரத்தம்....."

அதிர்ச்சியோடு கதவை சாத்தி விட்டு பின் வாங்கினான்.

" இப்படியே தான் தம்பி ரத்தம் கேட்டுட்டே இருக்கா ..சாப்பாடு எதுவும் சாப்பிட்றது இல்ல...டெய்லி ஆட்டு ரத்தம் கொடுக்கிறோம். தொடர்ந்து குடிச்சிகிட்டே இருக்கா... வயிறு பத்தி எரி்து பா அவளை இப்படி பார்க்க முடில.
என்றாள் அவள் அம்மா.

அதன் பின் தான் திலீப் அந்த யோசனை யை சொன்னான்.
அவனுக்கு சொந்த ஊர் கேரளா.
"டேய் இதை எல்லாம் ஈஸியா சரி பண்ணிடலாம் டா எங்க ஊர்ல எனக்கு ஒரு நம்பூதரியை தெரியும் அங்க போனா எதுனா விடை கிடைக்கும்"

"இந்தா இதை பிடி"
நம்பூதரியின் வெங்கள குரல் கேட்டு நிகழ் காலத்திற்கு வந்தான் சரவணன்.

அந்த தாயத்தை கை நீட்டி வாங்கி கொண்டான்.. தாயத்து ஏதோ சூடா இருப்பதை போல உணர்ந்தான்.

" கவனமா கேளுங்க..
இந்த தாயத்து குள்ள பல சக்திகள் அடங்கி இருக்கு இது இருக்கிற இடத்துல எந்த துர் ஆன்மாவும் இருக்காது.
ஆனா.."

சொல்லி நிறுத்திய நம்பூதரியை உற்று பார்த்தார்கள் சரவணனும் திலிப்பும்.

" இப்ப நான் சொல்ல போறது தான் ரொம்ப முக்கியம்... இந்த தாயத்து துஷ்ட ஆன்மாவுக்கு எதிரான ஒன்னு இதை அவ கையில் கட்டும் பொது ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும் அவ தூங்கும் போது தான் கட்டணும்.. மொத்தம் நாலு முடிச்சி போடணும் ..போட்டு முடிக்கும் வரை எக்காரணத்தை கொண்டும் அந்தப்பெண்ணோடய கண்களை பார்த்து விட கூடாது.... முடிச்சுகளை பாதியோடு நிறுத்தி விட கூடாது...
கடைசி முடிச்சி போடும் வரை அந்த கெட்ட ஆன்மா ரொம்ப சக்தி வாய்ந்த நிலைல தான் இருக்கும்
இதுல ஏதாவது தப்பாச்சுனா .... அவ உயிருக்கோ அல்லது உங்க உயிருக்கோ கூட ஆபத்து வரலாம்...எச்சரிக்கை.."

அவர்கள் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.


         ~~~    *****     ~~~    ******

திருநெல்வேலி அருகில் அந்த கிராமத்தில்.

"டேய் பாத்துடா ஜாக்கிரதையா பண்ணு"

திலிப் எச்சரித்து அனுப்பினான்.

"ப்ரியாக்காக உயிரையும் கொடுக்க தயார்  ".
சரவணன் அந்த தாயத்தோடு அந்த தனி அறையை நெருங்கினான்.
கதவுக்கே தெரியாத படி மெல்ல கதவை திறந்தான்.. ...
உள்ளே......
அறையின் ஓரத்தில் அவள் படுத்திருந்தாள்.. மெதுவாக அவளை நெருங்கினான் மேலே பரணில் ஒரு சாம்பல் நிற பூனை ஒன்று மியாவ் என்றது.
அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கைகளை மெல்ல தூக்கி அந்த தாயத்தை கட்டதொடங்கினான். முதல் முடிச்சு போட்டான்..அவள் சுவாசம் மெதுவாக ஏறி இறங்கி கொண்டு இருந்தது.
இரண்டாவது முடிச்சை போட்டான்.
இதயம் திக் திக் என்று இருந்தது.
மூன்றாவது முடிச்சி போட்டான் இவன் சுவாசம் நின்று விடும் போல இருந்தது.
நாலாவது முடிச்சை போட போன அந்த சமயத்தில் தான்....
அந்த சாம்பல் நிற பூனை பரணில் பழைய சாமானை உருட்டி விட்டு அது தரையில் விழுந்து சலங் புலங் என்று ஏகத்துக்கு சப்தம் போட....
தி்டுக்கென விழித்த பிரியா தனது ரத்த கண்களால் அவனை முறைத்து பார்த்தாள்.... நேருக்கு நேராக...

   ~~~      ***    ~~~   ****    ~~~~

கதவு திறக்கும் சப்தம் கேட்டு அவர்கள் அந்த அறையை நெருங்கினார்கள்
மணி சரியாக இரவு 12.
அந்த கதவை திறந்து கொண்டு அந்த உருவம் வெளியே வந்தது ..தலை விரி கோலமாக ...பிரியா...
மெல்ல அச்சத்துடன் நெருங்கி அவள் தோலை தொட்ட போது.........

"அம்மா....." என்றாள் சாந்தமாக ..உடல் நிறம் சாமான்ய நிலை க்கு திரும்பி இருக்க கண்களில் சாந்தம் தெரிந்தது...

"அம்மா பசிக்குது மா....சாப்பாடு இருந்தா கொடு...." என்றாள்...
அவள் அம்மா அவளை மகிழ்ச்சியோடு அரவணைத்து கொள்ள....

திலீப் பாய்ந்து சென்று அந்த அறையை நெருங்கினான்.
கதவை திறந்து உள்ளே சென்றான்..
உள்ளே தரையில் சரவணன் முட்டி போட்டு அமர்ந்திருந்தான்..
நெருங்கி சென்று அவன் தோளில் தொட.... திடுக்கென நிமிர்ந்து பார்த்த அவனை கண்டு திடுக்கிட்டான்....
உடல் பூரா ஒரு மாதிரி நீலம் பாய்ந்து இருக்க ஆங்காங்கே நரம்புகள் புடைத்திருக்க ...கண்கள் ரத்த சிகப்பில்
சிவந்திருக்க ...பயங்கர சப்தத்துடன் அலறினான்..

"ரத்தம் கொண்டுவாடா ஆஆஆஆஆ ரத்தம்......"