குட்கா, பான் மசாலாவுக்கு அனுமதி அளிக்க அமைச்சர், அதிகாரிகளுக்கு, ரூ.40 கோடி லஞ்சம்

mgid start
“தமிழக அமைச்சர், அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டது உண்மை!” : வருமான வரித்துறை
குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையை அனுமதிக்க தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு, 40 கோடி ரூபாய்  லஞ்சம் தரப்பட்டது உண்மை தான் என வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடைகளை மீறி, போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. 

அதன் பேரில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, தமிழக அமைச்சர், காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றும் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இந்த தகவல்களை வருமான வரித்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

மேலும், லஞ்ச தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், சோதனையில் சிக்கிய ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளோம் என்றும், அதில் போலீசாரின் நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.