உத்தரபிரதேசத்தில் ரூ.62 ஆயிரம் பணத்தை சாப்பிட்ட ஆடு

mgid start

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பசியால் வாடிய ஆடு ஒன்று ரூ.62 ஆயிரம் பணத்தை மென்று விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் சிலுவாபூரி கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செங்கல் வாங்க ரூ.66 ஆயிரம் பணத்தை ரூ.2 ஆயிரம் தாள்களாக பேன்ட்டில் வைத்து ஆடு கட்டப்பட்டிருந்த இடமருகே வைத்து விட்டு சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, ஆடு எதையோ மென்று கொண்டிருந்தது. இதை அருகில் சென்று பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். அவரது பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆடு சாப்பிட்டுள்ளது. பேன்டை எடுத்து பார்த்த போது, இரண்டு ரூ.2 ஆயிரம் தாள்களை மட்டுமே மீட்க முடிந்தது. ரூ.62 ஆயிரம் பணத்தை ஆடு மென்று விழுங்கியது.

இது தொடர்பாக சர்வேஸ் கூறியதாவது: பேன்ட் பையில் பணத்தை வைத்து விட்டு குளிக்க சென்று விட்டேன். அனைத்து பேப்பர்களையும் மென்று தின்னும் ஆடு, ரூபாய் தாள்களையும் மென்று தின்றது. இதற்கு என்ன செய்ய முடியும். அந்த ஆடு எனது குழந்தை மாதிரி. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் தெரிந்ததும் மக்கள் அதிகளவில் வந்து பணத்தை விழுங்கிய ஆட்டை பார்க்க துவங்கினர். அவர்களில் சிலர் சர்வேசுக்கு பல யோசனைகள் வழங்கினர். அதில், சிலர், ஆட்டை போலீசில் ஒப்படைக்க சொன்னார்கள். மற்ற சிலர், இறைச்சி கடையில் விற்க கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.