குடியாத்தத்தில் குழந்தைகளுக்கு சூடு வைத்து,வெந்நீர் ஊற்றி சித்ரவதை: தாய்-கள்ளக்காதலன் கைது

mgid start

குடியாத்தம்:
திருத்தணியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர்களுக்கு மகாலட்சுமி (11) என்ற மகளும், கார்த்திக் (10) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார்.
இதையடுத்து, கவிதா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜன் கோவில் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியேறினார்.
மகள் மகாலட்சுமி, 6-ம் வகுப்பு படிக்கிறார். மகன் கார்த்திக் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், குடியாத்தத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கோபி (வயது 34) என்பவருடன் விதவையான கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். மனைவியாக்கிய கவிதாவுடன் தனிமையில் உல்லாசமாக இருப்பதற்கு முதல் கணவருக்கு பிறந்த மகள், மகனும் தடையாக இருப்பதாக கோபி எண்ணினார்.
இதனால் குழந்தைகளை கொடுமைப்படுத்தினார். கோபியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றெடுத்த குழந்தைகள் என்ற இரக்க மின்றி கவிதாவும் சித்ரவதை செய்ய தொடங்கினார். கட்டாயப்படுத்தி வீட்டு வேலை செய்ய வைத்தனர். சமீபத்தில் தங்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில் 2 குழந்தைகளையும் அடைத்து வைத்தனர்.
தினமும் சமையல் செய்து வீட்டு, பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, துணிகளை துவைத்த பிறகு, குடிசைக்கு சென்று படுத்துக் கொள்ள வேண்டும். அங்கேயே நீங்கள் தனியாக சமைத்து சாப்பிட்டு கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் குழந்தைகள் 2 பேருக்கும் உடம்பு முழுவதும் சூடு போட்டுள்ளனர். சூடு போட்டதற்கான காயங்கள் உடல் முழுவதும் உள்ளன.சொல்லும் வேலைகளை உடனடியாக செய்யவில்லை என்றால் சூடு போடுவதை தாயும், அவரது 2-வது கணவரும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று குழந்தைகள் முகத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளனர். இதில் அலறி துடித்த 2 குழந்தைகளும், வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து துடி துடித்தனர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து, குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ் பெக்டர் இருதயராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூரான், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குழந்தைகளை சித்ரவதை செய்த தாய் மற்றும் அவரது 2-வது கணவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் குழந்தைகள் மகாலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் மீட்டு, கலெக்டரின் பரிந்துரையின் படி, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.