காமத்துப்பாலில் தொட்ட இடமெல்லாம் எண்ணற்ற இனிய கற்பனைகளைக் காணலாம்.

mgid start
குறளின் குரல் 

பெண்களின் அழகு சார்ந்த வர்ணனைகள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. தமிழில் அழகியல் உணர்வு கெடாமல், ஆபாசம் கலவாமல், மென்மையாகப் பெண்களை வர்ணித்த மாபெரும் கவிஞர் வள்ளுவப் பெருந்தகை. அவரை அடியொற்றித் தமிழ் இலக்கியம் வளர்ந்து செழித்தது. இன்றும் செழித்து வருகிறது. தமிழ்க் காதல் மரபென்பது வள்ளுவர் மரபுதான். காமம் சார்ந்த வர்ணனைகளைத் தவிர்த்துக் காதல் சார்ந்த வர்ணனைகளை எழுதித் தமிழைத் தழைக்கச் செய்வதே வள்ளுவர் நமக்குக் காட்டும் வழி.

திருக்குறள் நீதிநூல்தான் என்றாலும் வள்ளுவர் தம்மை அறநெறி போதிப்பவராக மட்டுமல்லாமல், கவிஞர் என்று புலப்படுத்திக் கொள்ளும் இடங்கள் குறளில் பல உண்டு. காமத்துப்பால் முழுவதுமே அவரைக் கவிஞராக இனங்காட்டும் குறட்பாக்களைத் தாங்கியவை. காமத்துப்பாலில் தொட்ட இடமெல்லாம் எண்ணற்ற இனிய கற்பனைகளைக் காணலாம். 

நலம் புனைந்துரைத்தல் என்று ஓர் அதிகாரம். தலைவன் தலைவியின் அழகைப் புகழும் புகழ்ச்சியில்தான் எத்தனை எத்தனை கற்பனைகள்! தமிழின் தலைசிறந்த காதல் கவிஞர்களில் ஒருவரல்லவா வள்ளுவர்! 
 
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 
மென்னீரள் யாம்வீழ் பவள்.’ 
 
எல்லா மலரையும் விட அனிச்ச மலர் மென்மையானதுதான். ஆனால், தலைவியோ அனிச்ச மலரை விட மென்மையானவளாம். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ அனிச்ச மலரும் சரி, அன்னப் பறவையின் மெல்லிய இறகும் சரி, தலைவியைப் பொறுத்தவரை அவள் பாதங்களில் நெருஞ்சி முள்போல் குத்தக் கூடியனவாம். 
  
வள்ளுவர் காதலியின் பாதத்தை அனிச்ச மலர் கூடக் குத்தும் என்றார். கண்ணதாசனோ காதலி கால்வைத்து நடந்தால் அந்தக் காலுக்கு வலிக்குமோ இல்லையோ தன் இதயமே புண்ணாகும் என்றார்! `பவழக் கொடியிலே முத்துக்கள் கோத்தால் புன்னகை என்றே பேராகும்’ என்ற பாடலில் வரும் அந்தக் கற்பனை வள்ளுவர் மரபில் வந்ததுதான்.

பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை
பண்ணாகும் - அவள் 
காலடித் தாமரை நாலடி நடந்தால்
காதலன் இதயம் புண்ணாகும்!’
`மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூவொக்கும் என்று!’
 
நெஞ்சே! இவள் கண்கள் மலர்களைப் போல இருப்பதால் பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் நீ மயங்குகிறாயே என்று தலைவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான். 

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.’
 
தளிர்போலும் உடல், முத்துப்போல் பற்கள், இயற்கையான நறுமணம், வேல்போலும் ஒளியுடைய கண்கள், மூங்கில் போன்ற தோள்கள் உடையவள் நான் விரும்பும் தலைவி என்கிறான் வள்ளுவர் சித்தரிக்கும் தலைவன்.

பற்களுக்கு முத்தை உவமையாக்கும் வள்ளுவர் மரபு தமிழில் பின்னாளில் மிகச் செழித்தது. மகாகவி பாரதி முருகப் பெருமான் காதலித்த வள்ளிக் குறத்தியின் பற்கள் முத்தைப் பழிக்கக் கூடியவை எனப் பாடல் புனைகிறார். `பல்லினைக் காட்டி வெண்முத்தைப் பழித்திடும் வள்ளி’
என்கிறார் அவர்.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய பிரபுலிங்க லீலையில் வரும் முத்துப்பல் பற்றிய கற்பனை ரசமானது. வீதியுலா வருகிறான் சிவபெருமான். தலைவி பார்வதி, அழகாக அலங்காரம் செய்துகொண்டு காதலன் சிவனைப் பார்க்க வாயிலுக்கு வருகிறாள். அவளிடம் ஒரு விசேஷமான முத்துப் புல்லக்கு இருக்கிறது. புல்லக்கு என்பது காதில் தொங்கும் ஜிமிக்கி போல் மூக்கில் தொங்கும் ஓர் அணிகலன். அதையும் அணிந்திருக்கிறாள் அவள். சிவனைப் பார்த்ததும் மலர்ந்து சிரிக்கிறாள்.

சிரிக்கும்போது பார்வதியின் வெள்ளை நிறப் பற்கள் தெரிகின்றன. அதை மூக்கில் புல்லக்கில் தொங்கும் முத்து எட்டிப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது. பார்வதியின் முத்துப் பற்களுக்கு உண்மையான முத்தான தான் இணையாக இல்லையே என்ற தாளாத ஏக்கத்தில் மூக்கில் முத்து தூக்குப் போட்டுக்கொண்டு தொங்குகிறது என எழுதுகிறார் சிவப்பிரகாசர். இப்படி பல்லுக்கு முத்தை உவமையாக்கி வள்ளுவர் மரபில் முத்து முத்தான பல கவிதைகளைப் படைத்தார்கள் கவிஞர்கள்.

`காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.’

தலைவியின் கண்ணைப் பார்த்தால் நாம் அதற்கு இணையில்லை என்று குவளை மலர் கவிழ்ந்து நிலன் நோக்குமாம். `பூங்குவளை கண்கள் கொண்டவளை ஒரு பூப்போல் பூப்போல் தொட்டு...’ என வாலியின் திரைக்கவிதையில் கண்ணுக்குக் குவளை மலர் உவமையாகிறது.

`அனிச்சப்பூக் கால்களையா பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.’

அனிச்சப் பூவைக் காம்பு நீக்காமல் தலையில் சூட்டிக் கொண்டு விட்டாளே! இவள் இடை தாங்குமா எனக் கவலைப்படுகிறது தலைவன் மனம். பெண்களின் இடையை மெல்லிய இடை என்றும் இல்லாத இடை என்றும் சொல்வது கவிமரபு.

`வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்!’

- என்ற பாடலில் கம்பர் சீதாதேவியின் இடை இருக்கிறதோ இல்லையோ என ஐயம் கொள்ள வைக்கும் இடை என்கிறார். பொய்யோ எனும் இடையாள் என்பது அவர் சொல்லாட்சி. கம்பராமாயணத்தின் இடையே, இடையைப் பற்றிய இன்னும் ஓர் அழகிய கற்பனை வருகிறது. சூர்ப்பணகையின் மூக்கை அறுத்துவிட்டான் லட்சுமணன். உடனே அவள் அழுதுகொண்டு ராவணனிடம் செல்லவில்லை.

ராமபிரானிடம் வருகிறாள். தம்பி இழைத்த அநீதிக்குப் பரிகாரமாக ராமன் தன்னை மணக்கவேண்டும் என்கிறாள். மூக்கில்லாத தன்னை எப்படி மணப்பது என்று அவன் யோசிக்கக் கூடாது, ஏன் இடையே இல்லாத சீதையை அவன் மணக்கவில்லையா என்ன என்று கேட்கிறாள் அவள்!

`பெருங்குலா உறுநகர்க்கே ஏகும்நாள்
வேண்டும் உருப் பிடிப்பேன் நன்றே
அருங்கலாம் உற்று அரிந்தான் என்னினும் ஈங்கு
இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கிலா இவளோடும் உறைவேனோ
என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்கிலா தவளோடும் அன்றோநீ
நெடுங்காலம் வாழ்ந்த தென்பாள்!’
 
சீதை மருங்கு இலாதவளாம்! மருங்கு என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு இடை என்பது பொருள். வள்ளுவத்தில் கம்பர் எந்த அளவு தோய்ந்திருந்தார் என்பதைக் கம்பராமாயணப் பாடல்கள் பலவும் புலப்படுத்துகின்றன. பெண்ணின் அழகை வர்ணிப்பதில் கம்பர் பெற்றிருந்த தேர்ச்சி, அவருக்கு வள்ளுவர் கொடுத்த கொடை! மூல நூல் ஆசிரியரான கம்பர் மட்டுமா? கம்ப ராமாயணத்திற்கு உரை எழுதிய வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் கூட எவ்வளவு ரசனையோடு தன் உரையை எழுதுகிறார்!

தேவலோக அழகிகளான ஊர்வசி, மேனகை, ரம்பை, திலோத்தமை எல்லோரும் ராவணன் மாளிகையில் பணிப்பெண்கள். இலங்கையில் மாளிகைகளின் மேல்மாடத்தில் முத்து பவழம் மாணிக்கம் போன்றவை குப்பையாக கவனிப்பார் இல்லாமல் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தப்படுத்துவது தேவலோக அழகிகளின் பணி. அதற்கு விளக்குமாறு வேண்டுமே?
 
சற்றே கையை உயர்த்துகிறார்கள். மின்னல் மின்னுகிறதல்லவா? அந்த மின்னலைப் பிடித்து ஒடித்து அடுக்கி விளக்குமாறாகச் செய்து கொள்கிறார்கள். பின் வைர வைடூர்யக் குப்பையைக் கூட்டுகிறார்கள். கையைத் தூக்கினாலே மின்னல் எட்டுமளவு உயரமாக இருந்ததாம் இலங்கையின் கட்டிடங்கள். `மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி’ என மின்னல் விளக்குமாறு தோன்றிய விதத்தைப் பேசுகிறார் கம்பர்.
 
அழகிகளில் ஒருத்தி திலோத்தமை அல்லவா? திலோத்தமைக்கு இலங்கை வேந்தன் இட்ட பணி என்ன தெரியுமா? அவன் செருப்பைத் தூக்கிக் கொண்டு அவனோடு நடத்தல்! ஊர்வசியின் பணி உடைவாளைத் தாங்குதல். மேனகையின் பணி வெற்றிலைப் பெட்டியைத் தூக்கி வருதல். ராவணன் சீதையைச் சந்திக்க அசோக வனத்திற்குச் சென்றபோது தேவலோக அழகிகளெல்லாம் இத்தகைய பணிவிடைகளைச் செய்தவாறே ராவணனைத் தொடர்ந்தார்களாம்.

`உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர
மேனகை வெள்ளடை உதவ
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
அரம்பையர் குழாம் புடை சுற்ற...’
 
ராவணனின் செருப்பைத் தாங்கி நடந்த திலோத்தமைக்கு திலோத்தமை என்ற பெயர் எப்படி வந்தது என விளக்குகிறார் உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார். திலம் என்றால் எள். பிரம்மன் எண்ணற்ற அழகிகளைப் படைத்தான். பின் அதுவரை தான் படைத்த எல்லா அழகிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் திலம் அளவு, அதாவது, எள் அளவு அழகை எடுத்துக் கூட்டி ஒரு பேரழகியை உருவாக்கினான். அவளே திலோத்தமை என்கிறார் வை.மு.கோ.!

`நலம் புனைந்துரைத்தல்’ என்ற அதிகாரத்தை அடுத்துவருகிறது காதல் சிறப்புரைத்தல் என்ற அதிகாரம். தலைவியின் உறுப்புக்களின் எழிலை வர்ணித்த வள்ளுவர், தலைவியின் உமிழ்நீர் இனிமை குறித்தும் வர்ணிக்கிறார். காதல் சிறப்புரைத்தல் என்ற அதிகாரத்தின் முதல் குறளே அதுபற்றியது தான்.

`பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.’
 
தலைவியின் இன்சொல் பேசும் வெண்மையான பற்களில் ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்ததுபோல் இனிக்குமாம். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கலந்து அவ்வை விநாயகருக்குப் படைக்கும் நாலடி வெண்பா பக்தி சார்ந்தது. பாலையும் தேனையும் கலந்தாற்போல் காதலியின் உமிழ்நீர் இனிப்பதாகச் சொல்லும் வள்ளுவர் படைத்த இந்த ஈரடி வெண்பா காதல் சார்ந்தது. காதலியின் உமிழ்நீர் இனிக்கும் என்ற இக்கருத்தோட்டத்தில் பின்னாளில் வந்த விவேக சிந்தாமணி ஓர் அழகிய பாடலைத் தீட்டுகிறது.

`வண்டுமொய்த் தனைய கூந்தல்
மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ
கனியொடு கலந்த பாகோ
அண்டர்மா முனிவர்க் கெல்லாம்,
அமுதமென் றளிக்க லாமே!’

காதலியின் உமிழ்நீர் கற்கண்டு, சர்க்கரை, தேன், கனியோடு கலந்த பாகு என்றெல்லாம் வர்ணித்தபின், அது அமுதமல்லவா, அதை தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அளிக்கலாமே என்கிறது விவேக சிந்தாமணி!

`மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்.’

விண்மீன்கள் சந்திரனையும் காதலி முகத்தையும் பார்த்து வேறுபாடு தெரியாமல் கலங்கித் திரிகின்றன என்கிறான் குறள் தலைவன்.

`அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.’
 
மெல்ல மெல்ல வளர்ந்து முழுமை பெறும் முழுநிலவில் உள்ளதுபோல என் காதலி முகத்தில் களங்கம் உண்டோ? இல்லை. அதனால் நிலவை விடவும் மேலானது என் தலைவி முகம் எனப் பெருமிதம் கொள்கிறது தலைவன் மனம்.

`மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.’

என் காதலி முகம்போல ஒளிவிட இயலுமானால் நிலவே, அப்போது உன்னை நேசிப்பேன் என்கிறான் தலைவன்.

`மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர் காணத் தோன்றல் மதி.’
 
என்னவள் போல் இருப்பதாய் எண்ணினால் நீ பலரும் காணுமாறு தோன்றக் கூடாது என நிலவுக்குக் கட்டளையிடுகிறான் தலைவன்.
இவ்விதம் நிலவை முகத்துக்கு உவமையாக்கும் வள்ளுவரின் மரபைத் தமிழ்க் கவிஞர்கள் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.

`மானென அவளைச் சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை
மீன்விழி உடையாள் என்றால் மீனிலே கருமை இல்லை
தேன்மொழிக் குவமை சொன்னால் தெவிட்டுதல் தேனுக்குண்டு
கூன்பிறை நெற்றி என்றால் குறைமுகம் இருண்டு போகும்...’

- என்ற தன் கவிதையில் நாமக்கல் கவிஞர் எந்த உவமையும் தலைவியின் அழகிற்குப் பொருந்தாதே என்று அங்கலாய்க்கிறார். மான் என்று அவளைச் சொல்ல இயலாது. காரணம் மானைப் போல் அவள் மிரள்வதில்லை. அவள் விழியை மீன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் விழியின் கருமை நிறம் மீனிலே இல்லை. அவள் பேச்சு தேன்போல் இனிக்கிறது என்றால் சரிவருமா? வராது. தேன் அதிகம் சாப்பிட்டால் திகட்டும். இவள் அன்புமொழி ஒருநாளும் திகட்டாது.

நெற்றியைப் பிறைநெற்றி என்று புகழலாம்தான். ஆனால் அப்படிச் சொன்னால் நெற்றி தவிர மீதியுள்ள முகம் இருண்டிருக்கிறது என்றல்லவா பொருளாகிவிடும்! எப்படித்தான் தலைவிக்கு உவமை சொல்வது என ஏங்குகிறார் நாமக்கல்லார். உண்மையிலேயே சித்திரம் தீட்டும் ஓவியரான அவர், இப்படி அழகாக வள்ளுவர் மரபில் ஒரு சொற்சித்திரம் தீட்டிக் காண்பிக்கிறார்.

விவேக சிந்தாமணி பெண்ணின் முகத்தை நிலவுக்கு உவமையாக்கி ஓர் அழகிய கற்பனைக் கதையைப் பேசுகிறது. கீழே ஒரு கருவண்டு ஏதோ ஒரு தாமரை மலரில் தேனுண்டு பின் மயங்கிக் கிடக்கிறது. தலைவி அதை நாவல் பழம் என நினைத்து, எடுத்து உண்பதற்காக வாயருகே கொண்டு போனாள்.

அதற்குள் வண்டு அவள் தொட்டதால் மயக்கம் தெளிந்து விழித்துக் கொண்டது. அது தன்னைப் பற்றியிருந்த கையைப் பார்த்தது. கை குவிந்திருந்ததால், தான் தேன் உண்ட தாமரை மலர் கூம்பிவிட்டதாக வண்டு எண்ணியது. தாமரை கூம்பக் காரணம் என்ன? அவள் தன் கையை முகத்தருகே கொண்டு போனாள் அல்லவா? தலைவியின் முகத்தைப் பார்த்து நிலவென்று மயங்குகிறது வண்டு!
 
`அடடா, நிலவு வந்துவிட்டதே? காலை போய் மாலை நிலவு வந்தால் தாமரை மலர் இதழ்களை மூடிக் கொள்வது இயல்பு தானே? இனியும் இங்கிருந்தால் தாமரை மலரின் உள்ளே சிக்கிக் கொள்வோம்!’ என்றெண்ணி வண்டு பறந்துவிட்டது. நாவல் பழம் விண்ணில் பறக்கும் அதிசயத்தைப் பார்த்து வியக்கிறாளாம் தலைவி!

`தேனுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியெனக் கொண்டு தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்றெண்ணி மலர்க்கரம் குவியும் என்றஞ்சி 
போனது வண்டோ பறந்ததோ பழம்தான் புதுமையோ ஈதெனப் புகன்றாள்!’

பெண்களின் அழகு சார்ந்த வர்ணனைகள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. தமிழில் அழகியல் உணர்வு கெடாமல், ஆபாசம் கலவாமல், மென்மையாகப் பெண்களை வர்ணித்த மாபெரும் கவிஞர் வள்ளுவப் பெருந்தகை. அவரை அடியொற்றித் தமிழ் இலக்கியம் வளர்ந்து செழித்தது. இன்றும் செழித்து வருகிறது. தமிழ்க் காதல் மரபென்பது வள்ளுவர் மரபுதான். காமம் சார்ந்த வர்ணனைகளைத் தவிர்த்துக் காதல் சார்ந்த வர்ணனைகளை எழுதித் தமிழைத் தழைக்கச் செய்வதே வள்ளுவர் நமக்குக் காட்டும் வழி.