சுற்றி நின்று கோஷமிட்ட பா.ஜ.க-வினர்! கெத்தாகப் பதிலளித்த பெண் போலீஸ்!

mgid start
’மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த உறுப்பினராக இருந்தாலும் சட்டம் சட்டம்தான். கட்சிப் பெயரைப் பயன்படுத்தி எதிலிருந்தும் தப்பிக்க முடியாது’ என்று பா.ஜ.க பிரதிநிதிக்குப் புரியவைத்துள்ளார் பெண் போலீஸ் ஒருவர்.
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஷாஹர் வட்ட பெண் போலீஸ் அதிகாரி, ஸ்ரீசேதா தாகூர் நேற்று வாகனச் சோதனையின்போது, பா.ஜ.க. மாவட்டப் பிரதிநிதி பிரமோத் லோதி என்பவரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களைக் காண்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பிரமோத் லோதியிடம் ஆவணங்கள் இல்லாததால், அவருக்கு அபராதம் விதித்து, செலான் வழங்கியுள்ளார் ஸ்ரீசேதா. அப்போது, பிரமோத்துடன் வந்த பா.ஜ.க. தொண்டர்கள், ஆட்களைத் திரட்டி போலீஸ் அதிகாரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர். அவர்களின் கோஷத்துக்கு சற்றும் பயப்படாத ஸ்ரீசேதா மிகவும் கூலாக, 'என் கடமையைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்' என்று பதிலளித்தார். இதையடுத்து, ஸ்ரீசேதா லஞ்சம் கேட்பதாகப் பொய்யாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். அவரைச் சுற்றி கூட்டம் கூடி கோஷங்கள் எழுப்பப்பட்டபோதும், ஸ்ரீசேதாவின் முகத்தில் பதற்றம் சிறிதும் காணப்படவில்லை.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர், ’'உங்கள் முதல்வரிடம் சென்று காவல்துறை இனி வாகனச் சோதனையில் ஈடுபடக்கூடாது என்று எழுதி வாங்கி வாருங்கள். அப்போது, நான் என் கடமையைச் செய்யாமல் இருக்கிறேன். நீங்கள் இப்படி நடந்து கொள்வது உங்கள் கட்சியின் பெயரைத்தான் களங்கப்படுத்தும்'’ என்றார் கன்னியமான குரலில்.

இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீசேதாவின் தைரியமும் கண்ணியமும் நெட்டிசன்ஸை அதிகம் கவர்ந்துள்ளது. அந்த வீடியோ இந்தியில் இருந்தாலும் ஸ்ரீசேதாவின் துணிச்சலான பேச்சுக்கும் உடல்மொழிக்கும் பாராட்டுகள் குவிகின்றன.