"இந்தியாவில் எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவோம்”

mgid start
உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள் ‘கலாம்சாட்’ அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து எஸ்.ஆர்-4 என்ற ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. நாசா- ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சியாளருக்குமான மிகப்பெரிய கனவு. ஆனால், நாசாவில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை மறுத்துவிட்டு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் அப்துல்கலாம். அவரது பெயருடன் விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், அதனை உருவாக்கிய தமிழகத்தைச் சேர்ந்த ரிஃபாத் ஷாருக்எனும் 18 வயது இந்திய இளைஞரை உலக அரங்கில் பிரபலப்படுத்தியுள்ளது.
வெறும் 64 கிராம் எடையுள்ள கலாம்சாட் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம், முப்பரிமாண வடிவில் அச்சிடப்பட்ட கார்பன் இழையின் செயல்திறனை நிரூபிப்பதேயாகும். இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையின் கீழ் 4 மணிநேரமும், விண்வெளியில் ஈர்ப்பு குறைவான சூழலில் 12 நிமிடங்களும் செயல்படக்கூடியது. புதுவிதமான அறிவியல் வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளில் 8 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் புவியின் வேகம், சுழற்சி மற்றும் காந்த சூழல் பற்றிய தகவல்களை அளவிடக்கூடியவை. 
உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய மகிழ்ச்சியில் கொஞ்சமும் குறையாமல் இந்த செயற்கைக்கோளை உருவாக்கிய ரிஃபாத் ஃபாருக் நம்மோடு பேசுகையில், “நாங்கள் உருவாக்கிய உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது எங்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே உற்சாகத்தோடு மேலும் சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த செயற்கைக்கோள் எங்களது கனவுத்திட்டமாக இருந்தது. எங்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா குழுவிற்குள்ள மிகப்பெரிய குறிக்கோளே அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ்(Space X) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் போல, இந்தியாவில் ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். 
இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிவியலாளர்களை சுயதொழில் முனைவோர்களாக உருவாக்குவோம். எங்கள் செயற்கைக்கோளோடு சேர்த்து 80 கண்டுபிடிப்புகள் இந்த விண்வெளி ஏவுதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றின் பெயர்ப்பட்டியல் இனிதான் வெளியிடப்படும். ஒவ்வொன்றையும் காண ஆர்வமாக உள்ளோம். எனது 12-ஆம் வயதிலேயே அறிவியலின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பா ஒரு அறிவியலாளர் என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். அறிவியலாளர் ஸ்ரீமதிகேசனோடு இணைந்து ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.  எதிர்காலத்தில் நிச்சயமாக இந்தியாவில் எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவோம்” என்கிறார் உற்சாகமாக.

உலக அளவில் இந்திய இளைஞர்களின் மூளைக்கு தனி மவுசு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இத்தனை பெரிய சாதனைக்குப் பிறகும் நாங்கள் இந்தியாவிலேயே இருப்போம்; இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்போம் எனச்சொல்லும் ரிஃபாத்-ன் உறுதியும் தன்னம்பிக்கையும் பாராட்டிற்குரியது. வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு இந்திய இளைஞனும் சாதிக்க முடியும் என்பதற்கு ரிஃபாத் ஷாருக் சரியான சான்றுதான்.