எஸ்டேட் தொழிலாளர்களை நோக்கி எம்.எல்.ஏ., துப்பாக்கியை காட்டியதால் பரபரப்பு

mgid start
கோட்டயம்,
கேரள மாநிலத்தில் பூஞ்சார் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.ஜார்ஜ். தற்போது, கேரள ஜனபக்‌ஷம் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவர், தனது தொகுதிக்குட்பட்ட முண்டக்காயம் என்ற இடத்தில் உள்ள எஸ்டேட் அருகே பல ஆண்டுகளாக வசித்து வரும் 52 ஏழை குடும்பங்களை சந்திக்க சென்றார்.
அங்கு அவருக்கும், எஸ்டேட் தொழிலாளர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அவர்களை நோக்கி எம்.எல்.ஏ. தனது துப்பாக்கியை காட்டினார். இக்காட்சி பல்வேறு டெலிவி‌ஷன் சேனல்களில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘எஸ்டேட் முதலாளி தூண்டுதலின்படி, தங்களை வெளியேற்ற குண்டர்கள் சிலர் வன்முறையை கையாண்டு வருவதாக அந்த ஏழை குடும்பங்கள் கூறியதால், நான் அங்கு சென்றேன். எனக்கு எதிராக குண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினர். ‘துப்பாக்கியை காட்டு பார்க்கலாம்’ என்று சவால் விட்டார்கள். அதனால் எடுத்துக் காட்டினேன். அது, உரிமம் பெற்ற துப்பாக்கிதான்’ என்றார்.
சம்பவம் குறித்து போலீசில் யாரும் புகார் கூறவில்லை. இருப்பினும், இதை விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர்.