தோழியின் புகைப்படத்தை வைத்து இளைஞரிடம் நூதன முறையில் பண மோசடி!

mgid start
சென்னையில், வாட்ஸ் அப்பில் தோழியின் புகைப்படத்தை வைத்து இளைஞரிடம் நூதான முறையில் பண மோசடி செய்த பெண்ணையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் வாசனை பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில், ராயப்பேட்டை சாந்தா சாஹிப் தெருவைச் சேர்ந்த யாஸ்மின் குடியிருந்துள்ளார். இந்நிலையில், யாஸ்மின், இந்த பழக்கத்தை பயன்படுத்தி, தனது தோழி பிரியா என்பவரது தாயார் புற்றுநோயால் அவதிபடுவதாகவும், அதற்கு பண உதவி தேவைப் படுவதாகவும், தயாநிதியை அணுகியுள்ளார்.  அதேநேரம் போலியான வாட்சப் கணக்கு ஏற்படுத்தி, தனது தோழியான ரேவதி என்பவரது படத்தை DP-யாக வைத்து, தயாநிதியிடம் நட்பாக பழகிய யாஸ்மின் பின்னர் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

தயாநிதியிடம் தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட யாஸ்மின், தயாநிதியிடமிருந்து, சிறிது சிறிதாக 7 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் தயாநிதி கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு யாஸ்மினை கேட்டுள்ளார். அபோது, தனது தோழி ரேவதி என்பவரின் செக் புத்தகத்தைத் திருடிய யாஸ்மின், அதில் கையெழுத்திட்டு, தயாநிதிக்குக் கொடுத்துள்ளார். 

சந்தேகமடைந்த தயாநிதி வங்கியில் விசாரித்தபோது அது ரேவதி என்பவருடைய காசோலை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரேவதியின் முகவரிக்கு சென்று பார்த்தபோது தம்மிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்த பெண்ணின் DP ரேவதியின் படம் என்பது தெரிய வந்தது. பின்னர் நடந்தவற்றை தயாநிதி ரேவதியிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ரேவதி மற்றும் தயாநிதி இருவரும் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் அவுஸ் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலிசார், யாஸ்மின் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் இப்ராஹிமை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யாஸ்மின் இது போன்று பல ஆண்களை வாட்சப் மூலம் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து யாஸ்மின் மற்றும் இப்ராஹிமை  சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைத்தனர்.