பசு மாட்டைக் கொன்றதாகக் கூறி இஸ்லாமிய பால் பண்ணை உரிமையாளர் வீடு தீக்கிரை!

mgid start
ஜார்க்கண்டில் பசு மாட்டைக் கொன்றதாகக் கூறி பால் பண்ணை வைத்திருக்கும் இஸ்லாமியர் ஒருவரை தாக்கிய கும்பல், அவரது வீட்டை தீக்கிரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பரியாபாத் என்ற இடத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வூரைச் சேர்ந்த உஸ்மான் அன்சாரி என்பவர் பால் பண்ணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இவரது வீட்டின் அருகே தலையில்லாத பசு மாட்டின் உடல் இருந்ததாகக் கூறி அன்சாரியின் வீட்டை சூழ்ந்துக் கொண்ட கூட்டம் ஒன்று, அவர் மீதும் அவரது வீட்டின் மீதும் கற்களை வீசியும், கட்டைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்த போது, வெறித்தனத்துடன் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் அன்சாரியின் வீட்டினை சூழ்ந்து கற்களைக் கொண்டும், கட்டைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்துள்ளனர். போலீசார் அவர்களை கலைக்க முற்படுகையில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது.

கலவரக்காரர்கள் மற்றும் போலீசார் இடையேயான மோதலில் 30 போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் போலீசார் கூட்டத்தை கலைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 25 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.