ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்

mgid start
ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் 60 கிலோ உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:
சேலம் மாவட்டம் ஓமலூர் பச்சினம்பட்டியை சேர்ந்தவர் சக்தி. அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மங்கையர்கரசி. கோர்ட்டில் கிளர்க்காக உள்ளார். இவர்களது ஒரே மகள் பாக்யஸ்ரீ (வயது 17). இவர் ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
பாக்யஸ்ரீயின் உடல் எடை 60 கிலோ இருந்தது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மாணவி முடிவெடுத்தார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோரும் இதற்கு சம்மதித்தனர். அதன்படி அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் எடையை குறைப்பது குறித்து ஆலோசனை பெற்று வந்தார்.
இவரது உறவினர் ஒருவர் டாக்டராக உள்ளார். அவர் ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையம் பகுதியில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். மாணவி உடல் எடையை குறைக்க முயற்சித்த சம்பவம் தெரியவந்ததும் டாக்டர் மாணவியின் உடல் எடையை குறைப்பது குறித்து அவரது பெற்றோரிடம் பேசினார்.
மேலும் அவர் என்னிடம் வாருங்கள். உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை ஏற்படுத்தி ஒப்படைக்கிறேன் என்றார். இதை நம்பிய பெற்றோர் ஓமலூரில் இருந்து மகளை கந்தசாமிபாளையத்திற்கு அழைத்து வந்தனர். உறவினர் நடத்தி வரும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர் சிகிச்சையை ஆரம்பித்தார். 9 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியதின்பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 9-வது நாளில் பாக்யஸ்ரீ திடீரென மயங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து டாக்டரிடம் கேட்டனர். அவர் பெற்றோரிடம் விளக்கம் கூறி சமாளித்தார்.
இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதை அறிந்த டாக்டர் நீங்கள் உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்லுங்கள். நான் இருக்கிறேன். நானும் உங்கள் உறவினர் தானே? நான் பாக்யஸ்ரீயை கவனிக்க மாட்டேனா என்று கூறினார். இதை நம்பிய பெற்றோர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று பாக்யஸ்ரீயின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதை அறிந்த டாக்டர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பாக்யஸ்ரீயை கொண்டு சென்றார். மாணவியை பரிசோதனை செய்த டாக்டர் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து டாக்டர் மாணவியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினார். உடனே ஆம்புலன்சில் மாணவியின் உடலை ஏற்றி அனுப்பி வைத்தார்.
ஓமலூர் பச்சினம்பட்டிக்கு சென்றதும் மாணவியின் உடல் இறக்கப்பட்டது. இறக்கப்பட்ட உடனே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மகளின் சாவில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது உடலை பிரேத பரிசோதனை முடிவு செய்தனர்.
சேலம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்தால் சிகிச்சை அளித்த டாக்டர் இடையூறு செய்வார் என்று அஞ்சிய பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று முடிவுவெடுத்தனர்.
அதன்படி பாக்யஸ்ரீயின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பாக்யஸ்ரீ உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இது குறித்து பாக்யஸ்ரீ பெற்றோர் கூறும்போது, 60 கிலோ என்பது சரியான உடல் எடைதான் என்று மகளிடம் கூறினோம். ஆனால் மகள் சற்று எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதற்கான ஆலோசனை மட்டுமே பெற ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அப்போது உறவினரான டாக்டர் குறுக்கிட்டு நான் சரி செய்து தருகிறேன் என்று கூறியதின் பேரில் நம்பி மகளை ஒப்படைத்தோம். மகளை 9 நாளில் சிகிச்சை என்ற பெயரில் கொன்று விட்டார்.
எனவே எனது மகளை கொன்ற டாக்டரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது.