என் பாதையில்: கணவன் இறந்தாலும் நான் சுமங்கலி!

mgid start
சி
ல வாரங்களுக்கு முன், ‘அம்மா எப்படி அபசகுனமாவார்?’ என மதுரைத் தோழி லூர்து எழுதியிருந்ததைப் படித்தேன். கணவர் இல்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தன் மகளின் திருமணத்தைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்ட அந்தத் தோழியை நினைத்து வேதனை அடைந்தேன். இங்கே என் வாழ்க்கையையே உதாரணமாகச் சொல்ல நினைக்கிறேன். கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவள் திருமதிதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, எதையும் ஆழ்ந்து சிந்திக்கிற தனித்துவம், யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் பயப்படாமல் தெளிவான ஆற்றலுடன் பதில் சொல்லும் பாங்கு போன்றவை இருந்தால் பெண்கள் தனித்து மிளிரலாம்.
பிறந்தது முதல் பூமிக்குள் புதைக்கும்வரை மங்கலச் சின்னங்கள் மங்கைக்கு உண்டு. கணவன் என்பவன் நடுவில் வருகிறான், இடையில் மடிகிறான் . இடையில் வந்த சொந்தத்துக்காக நமக்குப் பிடித்த அடையாளங்களை ஏன் துறக்க வேண்டும்?
நான் முதிர்கன்னியாய், நாற்பத்தி எட்டு வயதில் என் கணவரின் வளர்ந்த மூன்று பிள்ளைகளின் பொருட்டுத் தாயானேன். திருமணமான ஐந்தாம் ஆண்டில் அவர் மாரடைப்பால் காலமானார். ஆனால், நான் மங்கலங்களை இழக்கவில்லை. என் திருமணம் முடிந்து 18-ம் ஆண்டு தொடங்கியது. என்னவர் மறைந்து 12 ஆண்டுகள் முடிந்து தற்போது 13-ம் ஆண்டு தொடங்கிவிட்டது. இப்போதும் குங்குமம் வைத்துக்கொள்கிறேன். கைகளில் கண்ணாடி வளையல்களுடன் செல்வேன். காலில் பெருவிரலுக்கு அடுத்த விரலில் ஒரு வளையம் போட்டிருக்கிறேன்.
புகுந்த வீட்டார், பிறந்த வீட்டார் என யாரும் என் செயலை இகழ்வதில்லை. என் தோழிகளின் வீடுகளிலும் என்னைக் கைம்பெண் என ஒதுக்குவதில்லை. நான் கணவனை இழந்தவள் என்று தெரிந்தும் யாரும் என்னை வெறுப்பதில்லை.
பெண் பார்க்க, நிச்சயதார்த்தம், புடவை எடுக்க, நகை வாங்க, கோயிலுக்குப் போக எனப் பல நிகழ்வுகளுக்கும் என்னை அழைத்து முன்னிலைப்படுத்துகிறார்கள். என் கணவன் மறைவுக்குப் பின் என் வீட்டில் நான்கு திருமணங்கள், கணவரின் வீட்டில் இரண்டு திருமணங்கள், சீமந்தம் போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் என்னைக் கட்டாயப்படுத்தி அழைப்பார்கள். நான் பழமையில் ஊறியவள், முற்போக்குச் சிந்தனையிலும் சிறந்தவள். எனக்குக் குழந்தையில்லை ஆனாலும் அம்மா என்றழைக்க மகன்களும் மருமகள்களும் இருக்கிறார்கள்!
- நவீனா தாமு, பொன்னேரி.