வெறும் சுவரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தீட்டிய அழகான சித்திரம்

mgid start
திண்டுக்கல்லில் வெறும் சுவரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தீட்டிய அழகான சித்திரத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர். மனநிலை பாதிப்பு என்பது மனதிற்கு மட்டும்தான் கலைக்கு இல்லை என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.
அழுக்கு சட்டை, பழுப்பேறிய வேட்டி, கைகளில் சாக்கு மூட்டை, எதையோ தேடும் கண்கள்.. காலிச் சுவற்றைப் பார்த்ததும் பரபரப்பாகும் கைகள்..
யார் இவர்… திண்டுக்கல் மக்களுக்கு மிகவும் பரிட்சையமானவர் இவர். ஆனால் யாருடனும் பேசுவது கிடையாது. பெயர் என்ன ? எந்த ஊர் ? எதுவும் தெரியாது. ஆனால் அவர் வரையும் ஓவியம் மட்டும் திண்டுக்கல் மக்களிடையே மிகவும் பிரசித்தம்.
கரிக்கட்டை, செங்கல்தூள், பச்சை இலைகள், சாக்பீஸ் துண்டுகள் இவற்றை மட்டும் கொண்டு இவர் வரையும் ஓவியம் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளச் செய்கிறது. ஒரு தேர்ச்சி பெற்ற ஓவியருக்கு சற்றும் சளைக்காததது இவரின் கைவண்ணம்..
ஒரு மழைக்காலத்து மாலை நேரத்தில் திண்டுக்கல் – பழநி சாலையில் உள்ள சுவரில் கிராமத்து சாலையில், தென்னை மரத்துடன் கூடிய அழகிய வீடு இருப்பது, அதில் நடந்து செல்லும் மனிதன் என ஒரு இயற்கை ஓவியத்தை இவர் தத்ரூபமாக வரைந்து கொண்டிருந்தார்.
பார்ப்போர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பலவகை வண்ணங்களை சுவரில் தீட்டிய அவர், கண்முண்ணே கொண்டு வந்தது தத்ரூபமான ஒரு ஓவியம். அதுவும் இன்றைய நவீன தொழில்நுட்பமான 3Dக்கே சவால் விடும் வகையிலான ஓவியம்….
இதனைக் கண்ட மக்கள் அப்படியே தங்கள் பணிகளை விட்டு, மெய்மறந்து ரசித்து நின்றனர். மிக மிக அழகான ஓவியத்தை வெறும் சுவரில் வரைந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சிலர் பரிசுகளை பணமாக வழங்க… செல்ஃபி நிகழ்வுகளும் நடந்தேறியது.
கலைக்கு உயிர் கொடுக்கும் இவரைப் போன்றவர்கள்.. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் மட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்களும் கூட..