வெயில், மழை எதுக்கும் கவலை இல்லை... ராணுவ வீரர்களுக்கு ஜிபிஎஸ் கோட்: சேலம் மாணவி அசத்தல்

mgid start
சேலம் : கடந்த 2016ம் ஆண்டு நடந்த உரி தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் 4 மணி நேரம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்னும் தாக்குதலை நடத்தியது. இதில் 38 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ெகால்லப்பட்டனர். இதற்கடுத்த சில நாட்களில், எல்லையில் பணியாற்றிய 2 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கடத்தியது. அப்போது, இந்திய ராணுவத்தினரால் நமது வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. 

இந்த செய்தி, அரசு பள்ளி மாணவியான சுவேதாவுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நமது இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் தன்னால் ஏதாவது செய்யமுடியுமா? என்ற சிந்தனையோடு, பள்ளியின் அறிவியல் ஆசிரியை வெண்ணிலாவிடம் கேள்வி எழுப்பினார். அவரது உதவியுடன் ராணுவ வீரர்களுக்காக கடும் குளிரை தாங்கவும், அவர்கள் எல்லைகளில் இருக்கும் இடத்தை உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பிரத்யேகமாக ஜிபிஎஸ் கோட் ஒன்றை உருவாக்கினார். இதை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்து பலரது பாராட்டை பெற்றுள்ளார் மாணவி சுவேதா. அப்பா  சேகர் லாரி ஓட்டுநர். அம்மா செந்தில்குமாரி பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்கிறார். அக்கா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அண்ணன் கூலி வேலை செய்கிறார். 

தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவி சுவேதா கூறியது: சேலம் கந்தம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறேன்.   இந்திய ராணுவ வீரர்கள் எல்லைகளில் நின்று எதிரிகளுடன் போரிட்டு நமது நாட்டை காத்து வருகின்றனர். ஒரு நாட்டில் இயற்கை அரண்களுக்கு அடுத்தபடியாக ராணுவம் விளங்கி வருகிறது. ராணுவ வீரர்கள் உயிரை பணயம் வைத்து எதிரி நாடுகளுடன் போரிட்டால் தான்  நம்மால் நிம்மதியாக வாழமுடியும். ஆனால், எல்லை பிரச்னைகளில் ராணுவ வீரர்கள் அடிக்கடி தொலைந்துவிடுகின்றனர். இதற்கு ஒரு மாற்று வழியாக நான் உருவாக்கியது தான் ஜிபிஎஸ் கோட். நான் உருவாக்கிய இந்த கோட்டில் ஜிபிஎஸ் ட்ராக்கர் வைத்துள்ளேன். 

கடும் குளிரை தாங்குவதற்காக கோட்டில் 6 வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வரும் எலக்ட்ரிக் எனர்ஜியானது வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு, அதை அணியும் வீரருக்கு இதமான வெப்பத்தை தருகிறது. இது, வீரரை சுற்றிலும் நிலவும் வெப்பத்தின் அளவை கணக்கிட்டு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதனால், வெப்பநிலை சீராக இருக்கும்.  மேலும், இதில் சிம்கார்டு மூலம் ஜிபிஎஸ் ட்ராக்கர் இணைத்துள்ளேன். ராணுவ வீரர், எதிரிகளால் சுடப்பட்டாலோ அல்லது பனிச்சரிவுகளில் சிக்குண்டாலோ ஜிபிஎஸ் ட்ராக்கரில் உள்ள குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேஷன் மூலம் அவர்களின் கன்ட்ரோல் ரூம் அல்லது உயரதிகாரிகளுக்கு குறுஞ்செய்தியாக சென்றுவிடும். இதனால், அவர்களை எங்கிருந்தாலும் எளிதில் கண்டறிந்து விடமுடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.