பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை மகனுக்கு 30 ஆண்டு சிறை!

mgid start
திருச்சி  அ.தி.மு.க முன்னாள் துணைமேயரும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மகனுமான ஆசிக் மீரான் உள்ளிட்ட  நான்கு பேருக்கு, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில், திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியை அடுத்த பாடாலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து, மரியம் பிச்சையின் மகன் ஆசிக் மீரானுக்கு திருச்சி மாநகராட்சியின் துணைமேயா் பதவி வழங்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. கடந்த அ.தி.மு.க ஆட்சியில், இனி ஆசிக் மீரானுக்கு அரசியலில் ஏறுமுகம்தான் என நினைத்துக்கொண்டிருந்த நிலையில், திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையில் உள்ள துர்கா என்கிற துர்கேஸ்வரி, என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆசிக் மீரான்தான் அப்பா என்றும், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, வயிற்றில் குழந்தையைக் கொடுத்துவிட்டதாகவும், பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் அவர்மீது புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில், ஆசிக் மீரான் மீது வழக்குப்பதிவுசெய்த திருச்சி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ஆசிக் மீரான் மீது பாலியல் வன்கொடுமை, ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுதல் உள்ளிட்ட  ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 2014 மார்ச் மாதம் வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இதை அடுத்து, ஆசிக் மீரான் தனது துணைமேயர் பதவியை ராஜினாமா செய்தார். மிக நீண்ட முயற்சிக்குப் பிறகு, மதுரை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தப் பிரச்னையில் சமரசம் செய்ய முயற்சி எடுக்கவும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிக் மீரான் மதுரை காந்தி மியூசியத்தில் ஒரு வாரம் தங்கி சேவை செய்யவும் உத்தரவிட்டது. அதன்பிறகு ஆசிக் மீரான் வழக்கறிஞர், திறந்த நீதிமன்றத்தில் துர்காவை ஆசிக் மீரானின் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயார், அந்தக் குழந்தை ஆசிக் மீரானுக்குப் பிறந்த குழந்தைதான் என ஒப்புக்கொண்டார். அதையடுத்து, துர்காவை திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறேன். ஆனால், துர்கா அவரின் தாயோடு இருக்கட்டும், அவ்வப்போது வந்து தனிக்குடித்தனம் நடத்துகிறேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் ஆசிக் மீரான்.
இதற்கு, துர்கா சம்மதிக்கவில்லை. ''என்னை ஆசிக் ஊரறிய திருமணம் செய்துகொள்ள வேண்டும். என்னுடன் தனிக்குடித்தனம் நடத்தும்படி ஆசிக் மீரான் சொல்லுவதை நம்பத் தயாராக இல்லை. அவரின் வீட்டில் என்னையும் எனது மகளையும் வைத்து குடும்பம் நடத்த வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார். இதை, ஆசிக்மீரான் நிராகரித்தார். இதையடுத்து, ஆசிக் மீரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துர்கா, நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கில் துர்காவுக்கும் ஆசிக் மீரானுக்கும் மரபணுச் சோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதற்கு ஆசிக் உடன்பட மறுத்தார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி கடுமையாகக் கண்டித்ததுடன், மரபணுச் சோதனை நடத்த உத்தரவிட்டார். மேலும், ஜீவனாம்சம் கேட்டும் துர்கா வழக்குத் தொடந்தார். இந்த வழக்குகளை ஆசிக் மீரான் இழுத்தடித்து வந்த நிலையில், வழக்கில் கடந்த 22-ம் தேதியே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இன்று காலை திறந்த நீதிமன்றத்தில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் முன்பாக, முன்னாள் துணைமேயர் ஆசிக் மீரான், வி.எஸ்.டி.பாபு என்கிற சந்திரபாபு, சரவணன், ஆசிக் மீரானின் மாமியார் மைமூன் ஷெரிபா ஆகியோரும், பாதிக்கப்பட்ட துர்காவும் ஆஜரானார்கள். இதையடுத்து, நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், ஆசிக் மீரானுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, இந்த அபராதத்தைக் கட்டத்தவறினால் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மேலும் சந்திரபாபு, சரவணன், மைமூன் ஷெரிபா ஆகியோருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பளித்தார்.

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.