கணவரின் கள்ளக்காதலால் இளம்பெண் தற்கொலை வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம்

mgid start
கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் இருப்பதால் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி வைத்து உள்ளார்.
திருவொற்றியூர்,
சென்னையை அடுத்த மணலி அண்ணா நகரைச் சேர்ந்தவர் டார்வின்(வயது 30). இவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பி.காம் பட்டதாரியான தேவி(26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
டார்வினுக்கும், சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வி‌ஷயம் தேவிக்கு தெரிய வந்ததால், கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் தேவிக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் வாங்கி வரும்படி கூறி அவருடன் டார்வின் தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
நேற்று முன்தினம் கணவன்–மனைவி இடையே, இந்த கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு டார்வின் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த தேவி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மணலி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தேவி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது தேவி தனது வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி இருந்தது தெரிய வந்தது. அதில் அவர், ‘‘எனது சாவுக்கு கணவர், மாமனார் பிச்சையன், மாமியார் வசந்தா ஆகியோர்தான் காரணம். எனக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதை 17 பக்க கடிதமாக எழுதி எனது அறையில் கட்டிலுக்கு அடியில் வைத்து உள்ளேன்’’ என எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், ‘‘எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் உள்ளது. அந்த பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருக்கும் படத்தை அவரது செல்போனில் பார்த்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரின் கள்ளக்காதலுக்கு அவருடைய தாய்–தந்தையும் உடந்தையாக இருந்தனர்’’ எனவும், அவருக்கு கணவர் குடும்பத்தினர் செய்த கொடுமைகள் குறித்தும் விரிவாக எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவர், தனது மரண வாக்குமூலத்தை குரல் பதிவாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தனது உறவினருக்கும் அனுப்பி உள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டார்வின், அவருடைய தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேவிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனது மரண வாக்குமூலம் அடங்கிய கடிதத்தை கணவர் குடும்பத்தினர் மறைத்து விடலாம் என்பதால், தேவி அந்த கடிதம் போலீசார் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘கஜினி’ படத்தில் வருவது போல் பேனாவால் தனது வயிற்றில் மரண வாக்குமூலம் எழுதி வைத்து உள்ளார்.